ம.நவீன் அவர்களின் மிருகம் சிறுகதை: கடிதம் (வாசிப்பனுபவம்)

மிருகம் சிறுகதை: https://vallinam.com.my/version2/?p=9608

ம. நவீன் சார் அவர்களுக்கு,

‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.

கதையை வாசிக்கையில், போப்பியை ஒரு உருவமென  உணரும் போதெல்லாம் ஏனோ என் உள்ளுணர்வு அடி ஆழ்மனதிற்கு சென்று என்னுள் கனன்றுக் கொண்டிருக்கும் எதையோ மெதுவாய் தட்டி எழுப்பவதுப் போன்ற உணர்வு. எங்கோ ஆழத்தில் நாமெல்லாம் போப்பி தானே. அல்லது என்னை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன். முடிவாக எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால் ஆழத்தில். ஆழமென்றால், பாதாள லோகம் போன்ற ஆழத்தில். அந்த உணர்வின் மேல் போட்டு மூடி விட்ட எத்தனையோ மேன்மைகள், வெற்றிகள், ஒழுக்கங்கள், சமரசங்கள். அதையெல்லாம் தாண்டி மிக அடியில். ஒரு கபம் போல ஒட்டிக் கொண்டிருக்கும் கீழ்மையெனும் ஆழமது.

கோமதியும் நம்மில் பலரில் தோன்றியிருப்பாள். அல்லது தொண்டைக் குழியில் சிக்கிய நுண் நஞ்சாய் நாமும், எங்கோ யாரிடமோ கோமதியாக நம்மை வெளிப்படுத்தியிருப்போம். சில நேரங்களில் எண்ணத் தோன்றும். கசப்பு என்பதை நமக்கு யாரோ மேல் ஏற்படும் ஒவ்வாமையில் உமிழ்விதை விட அருகில், நம்மை ஒரு கணமும் பிரியா நேசத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிலரது மேல் எச்சில் போல் துப்பிவிடுவதுண்டு.

போப்பியின் நோக்கில் நாமெல்லாம் அதற்கு ஒன்று தான். நாயின் விழிகளுக்கு கூட இங்கிருக்கும் எல்லாம் கருப்பு வெள்ளையாய் தான் தெரியுமென்று எங்கோ படித்த ஞாபகம். நீங்கள் சொல்வதை கேட்காமல் அனைத்தையும் மீறி செய்வதன் பொருள் என்ன? அல்லது அவனுக்குள்ளும் ஏதாவது நஞ்சு ஒட்டியிருக்குமா? நாமறியா விஷம் போல. மென்புகை போல. அல்லது அவனின் கருமை நிறத்திற்கு நடுவில் தென்படும் வெண்மை நிறம் போல. அதனால் தான் இறுதியில் அந்த குற்ற உணர்வோ? இருக்கலாம். நம்முடன் சேர்ந்து வளர்ந்தவன் அல்லவா அவன். கோமதியின் வீட்டில் தானே வளர்கிறான்.

எங்கிருந்தோ கொண்டு வரும் சிலரை, நம்முடன் அல்லது நம்முள் இணைத்துக் கொள்கிறோம். போப்பியைப் போன்று மட்டும் அல்ல, கோமதியை போல கூட தான். அவர்களை நமக்கானவர்கள் என்று எண்ணி பேணிக்காத்து கொள்கிறோம். மனதில் வைத்து அடைகாத்துக் கொள்கிறோம். அவர்கள் மேல் பேரன்பு கொள்கிறோம். அவர்களின் மேல் நம் எதிர்பார்ப்புகள், ஆசைகள், இச்சைகள் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்கிறோம். பின் அதையே எதிர் திசையாக திருப்பி கோபம், அச்சம், வெறுப்பு, இயலாமை என நம்மையும் உருக்கி அவர்களையும் அதனுடன் சேர்த்து மெழுகாக்குகிறோம். உருகுவது ஏனோ அன்பு தான். அன்பு, இருமுனையும் கைப்பிடியும் கூர்மைக் கொண்ட கத்தி போன்றது. ஒரு கணம் தப்பினால் மொத்தமும் நஞ்சாய் மாறக் கூடிய சாத்தியம் உண்டு. ஆனால் அதில் திளைத்து சுகம் காண்கிறோம். விட்டு உதறி விட முடியமால் நம்மை நாமே இறுக்கி கொள்கிறோம். அறுக்கும் ரம்பத்தை முறுக்கும் முதுநாகம் போல.

ஆனால் கதையின் இறுதியில் போப்பி அனைத்தையும் விட்டு விட்டான். அவன் அழவில்லை. எப்பொழுதும் போல் குரைத்து கதற வில்லை. எல்லாம் முடிந்த பின் அவன் விடைப் பெறுகிறான். நன்றி உணர்ச்சிக்கு ஒரு கனிவான பார்வை மட்டுமே உங்களுக்கு அளித்து செல்கிறான். உங்கள் கடமை அவனை பேணி காத்தது. அவன் ஊழ் உங்கள் உயிரை காத்தது. இரண்டும் தராசின் சம நிலைக் கண்டதும், அனைத்தும் முடிந்தாயிற்று. ஒரு வேலை அதனால் என்னவோ நீங்கள் அவனைக் கொண்டுச் சென்று விடுகையில் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, பாப்பா ஒன்றை அறிந்திருக்க கூடும். ஒரு நாள், அன்று நடந்தவைகளை உங்களிடம் சொல்லவும் கூடும். பாப்பாவிடம் போப்பிவிற்கு அணுக்கமான ஒரு உரையாடல் உண்டு. அது நாமறியாத ஒன்று. பிறந்தவுடன் ஒன்றும் அறியாமல் வளரும் இருவருக்கிடையே நடக்கும் ஆழ் உரையாடல் அவைகள். என்றேனும் அந்த கடியின் வடுவை பாப்பா புரிந்து கொள்வாள். நீங்கள் இறுதியில் கதறியழும் பொழுது புரிந்துக் கொண்டது போல. கோமதிக்கு நல் ஊழ் இருந்தால், அவளுக்கும் இது ஏற்படலாம்.

போப்பியை முதன் முதலாய்க் கண்டெடுத்துக், அதை கோமதியிடம் காண்பிக்கையில், “டொண்டடொய்ங்!” என்று சொல்லும் பொழுது, உதட்டில் புன்னகைத் தோன்றி சிரித்து விட்டேன். அந்த அணுக்கத்தை என்றோ விரும்பியவளிடம் நான் உணர்ந்ததுண்டு. அவளை இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன். நீங்கள் கதையை முடிக்கும் பொழுது கோமதியை நினைத்துக் கொண்டதை போல.

நான் விமர்சகன் எல்லாம் இல்லை சார். வெறும் வாசகன் தான். கொஞ்சம் கற்பனையாளன் கூட. நன்றி.

சர்வின் செல்வா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top