கீலாகாரன் சிறுகதை : https://vallinam.com.my/navin/?p=6443
அன்புள்ள நவீன் சார் அவர்களுக்கு,
சிலர் நம்மிடம் பகிரும் நிகழ்வுகள், “எனக்கு இப்படி நடந்துச்சு தெரியுமா” என்று விவரித்து சொல்லும்போதெல்லாம் நான் உணர்வுகளை எல்லாம் ஒன்றாய் குவித்து கேட்பது வழக்கம். சில கதைகளை வாசிக்கும் பொழுது அவ்வாறான மன நிலை ஏற்படும். கீலாக்காரனை வாசித்து முடிக்கும் பொழுது, நானும் கதைச் சொல்லியைப் போல் ஒரு கடையில் அமர்ந்துக் கொண்டு, சீதாராமனை நினைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. கதையின் இறுதியில் வருவதுப் போல், சரியாக சுவாமியும் என்னிடம் ‘சாப்டாச்சாப்பா” என்று கேட்டார். சின்ன திடுக்கிடல்.
நான் அப்பொழுது பினாங்கின் MBS இடைநிலைப் பள்ளியில் பயின்றுக் கொண்டிருந்தேன். பள்ளிக்கு செல்லும் வழியில் இவ்வாறான ஒருவரை கண்டிருக்கிறேன். அங்கே ஒரு மேம்பாலச் சாலையின் அடியில் ஒரு கீலாக்காரன் இருப்பார். பினாங்கில் வசிப்பவர்கள் இதை வாசித்தால் அறிந்துக் கொள்ள முடியும். பினாங்கு நகரின் ‘Masjid Negeri’ எதிர்புறமிருக்கும் சாலையது. சீதாராமனை அவரோடு ஒப்பிட்டு கொள்கிறேன். எத்தனை சீதாராமன்கள் இருந்திருப்பார்கள். எத்தனை பேரை இவ்வுலகம் அடையாளம் கண்டிருக்கும். காலத்தால் கரைந்தழிந்தவர்கள் எத்தனைப் பேர், என்று நினைக்கும் பொழுது மார்பின் மேல் பெருத்த கணம் ஓங்கி அடிக்கிறது. நான் அவ்வாறான ஒருவரை நேரில் சந்தித்திருப்பதால், அவரை கேலிச் செய்திருப்பதால், கீலாக்காரன் என்று வசைப் பாடியிருப்பதால் இந்தக் கேள்விகள் எழுகின்றன. அவர்கள் எல்லாம் யார்? ஏன் அப்படி சென்று சேர்ந்தார்கள்? எது அவர்களை அந்த இருண்மைக்கு உந்தி தள்ளியது ? அவர்கள் வாழ்வு, சிந்தனை எல்லாம் எப்படி இருக்குமென்ற கேள்விகள். முன்பு ஒருமுறை பள்ளி முடிந்து திரும்பி நடந்து செல்கையில், அவர் நிர்வாணமாக நின்றுக் கொண்டிருந்தார். நான் என்னுடன் எடுத்து வந்திருந்த விளையாட்டு மாற்று உடைகளை அவரிடம் போட்டு விட்டு ஓடி விட்டேன். பின்பு பள்ளி புறப்பாட நடவடிக்கை ஆசிரியரிடம் அடி வாங்கியதாக ஞாபகம். மறுநாள் அவர் அந்த உடைகளை அணிந்திருப்பதை பார்த்த பொழுது ஏதோவொரு நிறைவு ஏற்பட்டது என்று இப்பொழுது எண்ணும் பொழுது தோன்றுகிறது. கூலிமிற்கு வந்தவுடன் அவரை நான் மறுபடி பார்த்ததே இல்லை.
ஒரு ஏழு வருடம் முன்னே சென்றால், கதை சொல்லியாக தான் நானிருந்தேன் என்று சொல்லலாம். அந்த மன நிலையை கடக்காத இளைஞன் இருக்க மாட்டான் என்று நினைத்துக் கொள்கிறேன். அடுத்தவர் சொல்லும் வேலைகளை செய்ய மனம் அறவே ஒப்பாது, ஆனால் செய்வதொன்றே வழி என்று இருக்கும். எத்தனை கெட்ட வார்த்தைகள், யாருமில்லா நேரத்தில் வெளி வந்திருக்கும் என்று, இப்பொழுது இதை எழுதும் பொழுது எண்ணி பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. எத்தனை மொன்னையாக இருந்திருக்கிறோம் என்ற உணர்வும் ஏற்படுகிறது. அதுவெல்லாம் வயதின், உணர்ச்சிகளின் வேகம், உச்சம். கதை சொல்லி சீதாராமனுக்காக திருடுகிறான். மாட்டிக் கொள்கிறான். சித்தப்பாவின் அன்பை, அரவணைப்பைக் கோருகிறான். சீதாராமனைக் கூட அவன் தந்தையாகவோ, சித்தப்பாவாகவோ நினைத்து இருக்கலாம். ஒன்றிலிருந்து தொலைத்த ஒன்றை, இன்னொன்றில் தேடுவது அது. அதனால் தான் அந்த கனிவு, அக்கறை, அன்பு எல்லாம்.
வேலு அண்ணன் பாத்திரம், ஒரு வகை ஆழ் மன திகைப்பை தந்தது. ஏன் என்று சொல்ல தோன்றவில்லை. சிலரை நாம் சந்தித்து இருப்போம். சிலர் நம் மனதையும் உடலையும் வெகுவாய் பாதித்திருப்பார்கள். சிலரை தண்டித்திருப்போம். சிலரை மன்னித்திருப்போம். நம் மனதை தோண்டிப் பார்த்தால், அவர்கள் எல்லாம் இன்னமும் எங்கோ ஓரிடத்தில் புகைப் போல உறைந்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், வெகு சிலரை மட்டுமே நம் தசை பிண்டத்தை நாமே வெட்டி வீசுவதைப் போல் அறுத்து எறிந்திருப்போம். அவர்களை காலப் போக்கில் மறந்தும் போயிருப்போம். அவ்வாறு ஒருவன் தான் எனக்கு வேலு. எங்கோ ஆழத்தில் எரித்துளியென எரிந்து, அது அணைந்து, கரிக் கல்லாய் மாறிவிட்ட நினைவுகள் அவை. அதை என்றுமே தொடக் கூடாது என்று எண்ணுகிறேன். ஆயக் கோட்டையில் வேலுவுடன் உண்மையில் இருந்தது யார்? பொதுவான மனம் இவள் தான் என்று சொன்னாலும், ஆழ்மனம் வேறொன்றை கூவி கத்துகிறது. இருக்கட்டும். அதை அடக்கி விடுகிறேன்.
கீலாக்காரர்கள் யாருக்காகவோ காத்திருக்கிறார்கள். இல்லை யாருடனோ தொடர்ந்து உரையாடலில் இருக்கிறார்கள். அல்லது நம்மில் இன்னமும் தோன்றாத ஒரு பித்தில் முன் கூட்டியே சென்று திளைத்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க. அவர்களை மீண்டும் நினைவுப்படுத்திய உங்களுக்கு நன்றி.
சர்வின் செல்வா