அந்தப் பேரரங்கமே எனக்காக எழுந்து நின்று கைத்தட்டிக் கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தப் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனக் கூட்ட அலைமோதல். அனைவரின் முகத்திலும் உடலிலும் ஒரு உற்சாக மனநிலை. கரகோஷங்களும் விசில் சத்தங்களும் காதைக் கிழித்துக் கொண்டிருந்தன. அஃது எனக்குப் பழக்கப்பட்டது தான். ஆனால் இது கொஞ்சம் பெரிய அரங்கம். ஐந்தாயிரம் பேர் கொண்ட மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. திரும்பி மேடையைப் பார்த்தேன். ஸ்வேதாவும் அங்கே அமர்ந்து கொண்டு கைத்தட்டிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் ஆச்சர்யம் தான். அவள் என் எதிரணி தலைவி. அவள் கைத் தட்டியது இன்னும் என் தலையை நிமிர்வடையச் செய்தது.

            அரங்கிற்கு முன் வரிசையில் பல முக்கிய பிரமுகர்கள், அரசியல் புள்ளிகள் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தில் பல்கலைகழக மாணவர்களும் தெரிந்தார்கள். நாளை நிச்சயம் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாய் வரப்போகிறவன் நான் தான் என்றுக் கற்பனை செய்து கொண்டேன். அந்த ஆண்டின் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் விருதை எனக்குக் கொடுத்திருந்தார்கள். தேசிய அளவில் நடந்த பட்டிமன்ற போட்டியில் எங்கள் அணியே வெற்றி  வாகை சூடியிருந்தது. அணித்தலைவன் என்ற முறையில் நானே வெற்றி சூடிய சுழற்கிண்ணத்தையும், ஆயிரம் வெள்ளி ரொக்கப் பணத்தையும் பெற்றுக் கொண்டேன். சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்ற விருதை வாங்குவது இது மூன்றாவது முறை. உள்ளுக்குள்ளே பேராணவம் எழுந்து பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. வெளியில் எவ்வளவு தன்னடக்கமாய் இருக்க முடியுமோ அவ்வளவு பணிவாயிருந்தேன்.

            “அந்தப் பையனப் பாரேன், எத்தன மேலே போனாலும், விருது வாங்குனாலும், எவ்வளோ பணிவா நடந்துக்குறாரு, அவ்வளவு அடக்கம் அவரு பேச்சுல. புள்ளைய நல்லா வளத்துருகாங்க” என்றார் ஒரு குண்டு பெண்மணி. சுற்றியிருந்தவர்கள் அதற்கு ஆமாம் போடுவதைப் பார்த்தேன். என் அப்பா இந்நேரம் இருந்திருக்க வேண்டும். அசடு வழிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். முகத்தில் மாறாப் புன்னகையுடன் எல்லோரின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டேன். மேடையிலிருந்து கீழே இறங்கையில், பத்திரிக்கை நிருபர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். கேமராவின் பளிச்சென்ற வெளிச்சம் கண்களைக் கொஞ்சம் கூசியது. முகம் சுளிக்காமல் அவர்களுக்கு மாறி மாறி போஸ்ட் கொடுத்தேன்.  அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருந்தேன். பதில் சொல்லிவிட்டு திரும்புகையில், பல்கலைகழக மாணவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அதுவும் பெண்கள் என்பதால் கொஞ்சம் அசடு வழிந்து கொண்டிருந்தேன். பெண்களின் புகழ் மாலையில் மிதந்துக் கொண்டிருந்தது உவப்பாயிருந்தது. அவர்களும் என்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள கேட்க, நானும் சற்றும் சளைக்காமல், எடுத்துக் கொண்டேன்.

            திரும்பி போகையில் அவர்களில் ஒருத்தி “எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காருல” என்றாள். இன்னொருத்தி சிரித்துக் கொண்டே “ப்ரைன் வித் ஸ்மார்ட்நஸ் டி” என்றாள். நான் ஆனந்தத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதை வெளிக்காட்டாமல், திரும்பி என் நண்பர்களைத் தேடினேன். அவர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி பாராட்டு மழையில் நனைவது ஒரு வித போதைப் போலிருந்தது. என் அணியினர் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றேன். “டேய் மச்சா. பின்னிட்டேடா, செம்மையா பேசுன” என்று என் முதுகைத் தட்டிக் கொண்டே “ஆதவன்னா சும்மாவா, எனக்கு அப்பவே தெரியும், நம்பே டீம் தான் ஜெய்க்கும்னு” என்று நவீன் சொன்னான். நான் சிரித்துக் கொண்டே ஸ்வேதாவைத் தேடினேன். அவளைக் காணவில்லை. நவீனிடம் அவள் எங்கே என்று கேட்டேன். அவன் கூட்டத்தில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினான். அரங்கிலிருந்த அனைவரும் சாப்பிட சென்று கொண்டிருந்ததால் ஸ்வேதாவைக் கூப்பிட்டது அவள் கேட்கவில்லை. பிறகு ஸ்வேதாவைப் பார்த்து விட்டேன். யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.  வயதானவர் போலிருந்தார் அவர். அவளைச் சென்றடைந்து பின்னாடியிலிருந்து தோலைத் தொட்டேன்.

            “நீ இங்கத்தான் இருக்கியா, ரொம்ப நேரம் உன்ன தேடிகிட்டு இருக்கேன். வா போயி சாப்பிடலாம் செம்ம கூட்டமா வேற இருக்கு, சாப்பாடு முடிஞ்சிற பொது,வா” என்று அவள் கைகளைப் பற்றினேன். அவள் திரும்பி “நில்லுங்க, இங்க வாங்க. இவர் எங்கப்பாவொட டீச்சர், அப்பாவோட செகண்டரி ஸ்கூல் வாத்தியார் .எங்கப்பா தான் அறிமுகம் செஞ்சி வச்சாரு, பேசிட்டு இருந்தப்போ இவரும் பட்டிமன்ற பேச்சாளார்னு தெரிஞ்சுகிட்டேன். எழுதாளரும் கூட” என்று சிரித்துக் கொண்டே அந்தப் பெரியவரைக் காட்டினாள். நான் அவருக்கு வணக்கம் சொல்லி “எப்படி சார் இருக்கீங்க, மொத போயிட்டுச் சாப்புடுவோம், கூட்டத்த பாத்தா சாப்பாடு முடிஞ்சிரும்னு தோணுது” என்றேன். “தம்பி, ரொம்ப நல்லா பேசுனிங்க, திறமையான பேச்சு, நல்ல மொழிவளம், மொழிநடை இருக்கு உங்களுக்கு” என்றார். ரொம்ப நன்றி சார், ஆனா இப்பப் போயிட்டு சாப்புடலாம்” என்று ஸ்வேதாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு திரும்பி நடந்தேன்.

            “ஏன் உனக்கு இப்ப இவ்ளோ அவசரம், கொஞ்சம் பேசுனாத என்ன, கொறஞ்சி போயிருவியா, பேய் பசி பசிக்குதோ?” என்றாள். நான் திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தேன். நேராக உணவருந்தும் இடத்திற்கு சென்று வரிசையில் நின்றோம். அவளை முன்னே விட்டு நான் பின் நின்று கொண்டேன். அப்படியே அவளைப் பார்த்தேன். மஞ்சள் நிறப் புடவையில் மிக அழகாய் இருந்தாள். “மஞ்சள் கலர் புடவை ரொம்ப அழகாயிருக்கு” என்றேன். அவள் திரும்பிப் பார்த்தாள். “புடவ அழகாயிருக்கா , இல்ல புடவைல நா அழகா இருக்கேனா?” என்று கேட்டாள். இருவரும் சிரித்துக் கொண்டோம். எங்களைக் கடந்து சென்றவர்கள் எல்லாம், என்னை அடையாளங் கண்டு கொண்டு வந்து பேசினார்கள். வரிசையில் நின்று உணவை வாங்கிக் கொண்டு, அங்கிருந்த மேஜை மீது வந்தமர்ந்தோம்.

            “ஏய்,..ஸ்வேதா. நீ ஒண்ணுமே சொல்லல” என்று கேட்டேன். அவள் திரும்பாமலே “எதப்பத்தி?” என்றாள். நான் ஒன்றும்  சொல்லவில்லை. “கோவமா?” என்றேன். “எனக்கு எதுக்குக் கோவம், நீ நல்லா தான் பேசுன, பட் ஒன்னு கேக்கணும், உனக்கு எப்படி, எப்ப ராமர் மேல அவ்ளோ வெறுப்பு வந்துச்சி, நீ ராமாயனத்துயே மாத்தி சொன்ன மாறி இருந்துச்சி. உங்க வீட்டுலே எல்லாமே ராமர கும்புடறவங்க தானே, அப்றோம் ஏன் அப்படி எல்லாம் பேசுன?” என்று கேட்டாள். “இல்ல. இதெல்லாம் சும்மா போட்டிக்குத் தான். நீ ஏன் இப்படி பாக்கக் கூடாது. ராமர்கிட்ட ஒரு நியாயம் இருக்குற மாதிரி, ராவணன் கிட்டயும் ஒரு நியாயம் இருந்துருக்கும்ல, நா அத தான் பேசுன. அவுங்க கொடுத்த தலைப்பு அந்த மாதிரி. ராமரோட இயலாமைகள் பத்திப் பேசுனா தான் போட்டியில ஜெயிக்க முடியும்,” என்றேன். அவள் ஒரு வாய் சோற்றை எடுத்து வாயில் வைத்தாள். மென்று கொண்டே “ அதுக்குன்னு, ராமர் கடவுளோட அவதாரம். அவர இப்படி தரம் தாழ்த்திப் பேசுனது எனக்குப் புடிக்கல. பட், இட்ஸ் ஓகே, நீ நல்லாதான் பேசுன. அதேப்படி உன்னோட தர்க்கங்கள் எல்லாத்தையும் சொல்லி, இத்தனப் பேரையும் நம்ப வெச்சுட்ட? திறமைசாலிதான்” என்றாள். “திறமசாலிதான் , இல்லனா, உன்ன வளச்சி போட்டுருக்க முடியுமா? என்றேன். அவள் சிணுங்கிக் கொண்டே என் தொடையைக் கிள்ளினாள். “ஆவ்..வலிக்குதுடி..” என்று மெதுவாய் கத்தினேன். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு அம்மா எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.

            அன்று நாங்கள் பட்டிமன்றத்தில் பேசிய தலைப்பு ராமரையும் ராவணனையும் பற்றியது. எங்கள் அணியினர், ராவணன் தான் மேன்மையானவன் என்றும், அதை நிரூபிக்கும் தர்க்கங்கள், விவாதங்கள் என விலாசி விட்டிருந்தோம். ஆனால் அரங்கத்தில் நாங்கள் ராவணனைப் புகழும் போதேல்லாம் பலத்த கரகோஷங்கள். ராமருக்கு கொஞ்சம் பரிதாப நிலைதான். எங்கள் எதிரணியினர் எத்தனைச் சொன்னாலும், அதை மக்கள் முன்னமே கேட்டிருந்ததால் கைத்தட்டல்கள் எழவில்லை. ஸ்வேதா தான் எதிரணியின் தலைவி. அவளை வென்றதும் கூட ஒரு வித பெருமை தான். ஆனால் அவளிடம் அதை சொல்லிக் கொள்ளவில்லை. தெரிந்தால் உண்டு இல்லையென்று செய்து விடுவாள்.

            நான் முதலில் சாப்பிட்டு விட்டு எழுந்தேன். சாப்பிட்ட பிளாஸ்டிக் தட்டைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு கை கழுவச் சென்றேன். கை கழுவிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கே முன்பு ஸ்வேதாவுடன், பார்த்தப் பெரியவரும் இருந்தார். “வணக்கம் சார், சாப்பிட்டிங்களா?” என்றேன். சாப்பிட்டு விட்டதாய் கூறினார். பின்பு இருவரும் அங்கிருந்த மெல்லிழைக் காகிதங்களைக் கொண்டு கைகளைத் துடைத்துக் கொண்டோம். அவர் தான் பேசினார். “தம்பி , ரொம்ப நாளா பட்டிமன்றம் பேசுறிங்களோ?” என்றார்.

            “இல்ல சார், இப்ப தான் ஒரு நாலு வருஷமா பேசிட்டு இருக்கேன். யுனிவெர்சிட்டில பரிட்சயமாச்சு  சார். சாரி சார். மொத ரொம்பப் பசி, அதான் சரியா பேச முடில. சார் நீங்க..?” என்றேன். அவர் சிரித்துக் கொண்டே பேசினார். பழுத்த சிரிப்பு அவருடையது. கண்கள் மட்டும் ஒளிக் கொண்டிருந்தது போலிருந்தன. “நா எழுத்தாளரா இருந்தேன்பா, ரொம்ப வருஷதுக்கு முன்னாடி பட்டிமன்ற பேச்சாளரா இருந்தேன். உங்கள மாதிரி தான். துடிப்பான இளைஞன் அப்போ. நிறைய தடவ சிறந்த பேச்சாளர் விருதுலாம் கெடச்சிருக்கு. ஆனா இப்பத் திரும்பி பாக்குறப்ப எல்லாம் சும்மா வெற்றாணவம்தானு எண்ணம் இருக்கு” என்றார். எனக்குச் சுருக்கென்றது. ஆனால் ஒன்றும் பேசவில்லை. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனோ அதை கேட்க வேண்டும் என்று தோன்றியது. “ஏன் தம்பி, ஏன் நீங்க ராமரப் பத்தி தப்பா பேசுனிங்க?” என்று கேட்டார். அவர் இதெல்லாம் வெறும் ஆணவம் என்று சொன்னது எனக்குக் குடைச்சலைத் தந்தது. நான் பதிலேதும் சொல்லவில்லை. மீண்டும் அவரே பேசினார். “தப்பா நெனசுக்குலனா ஒன்னு சொல்றேன் தம்பி. நீங்க ராமர பத்தி உங்க தர்க்கத்தால, விவாதத்தால தப்பா பேசும்போது மக்கள் எல்லாரும் ஏன் கை தட்டுனாங்க தெரியுமா? ஒரு ஆகச் சிறந்த உத்தமனை நம்மளோட சிற்றியல்புகளால் புரந்தள்ளிட்டுப் போறோம். அவரோட உத்தம குணங்களால நம்ம சீண்டபடுறோம், நம்மலோட இயல்பு சீண்டபடுது. கடவுளே ஆனாலும் எப்படி ஒருத்தன் இவ்ளோ நல்லவனா இருக்க முடியும்னு, நம்மளோட இயல்பு அவர மறுக்குது. அவரோட குணங்கள அவமானப்படுத்த நெனக்கிது. எப்போ ஒரு மனுஷன் இன்னொரு சக மனுஷன சின்னதா உணர வெக்கிறானோ, தராசின் மறுமுனயில இருக்குற நம்ம ஆணவம் துடிதுடிச்சு போயிருது. அதனால தான் ராமன கேவலமா பேசி ராவணன உயர்வா பேசும் போது, நமக்குள்ள இருக்குற, தொண்டையில மாட்டிக்கிட்டு இருக்குற விஷம், துளி கபம் மாறி வெளிய வந்து தெறிச்சி, சிரிச்சிச் சந்தோஷபடுது” என்று சொல்லி தண்ணீரால் வாயைக் கொப்பளித்து உமிழ்ந்தார். நான் ஒன்றுமே பேசவில்லை. ஆனால் அவர் சொன்னது என்னுள் மறைக்கப்பட்ட ஒரு உண்மைதான். அந்த ஒரு துளி விஷமாய் மாறி இருந்தது என்னவென்று புரிந்து கொண்டேன். திரும்பி போய்விடலாம் என்று எண்ணினேன்.

            “தம்பி, நா கூட இப்படி தான். எழுத்தாளனாயிருந்தேன். காந்தியைப் பற்றி எல்லாரும் அந்தக் காலத்துல உயர்வா பேசிட்டு இருக்குறப்ப, நான் அவர விமர்சிச்சி தப்பா பேசி நிறைய எழுதிருக்கேன். ஏன் தெரியுமா? காந்தியோட நேர்மை நம்மள  சின்னதாக்குது. காந்தி பெரும் புரட்சியாளன். இந்தியா முழுதும் பயணம் செஞ்சிருக்காரு. எத்தனை போராட்டங்கள், எத்தன உண்ணாவிரதங்கள். வெள்ளகாரங்கள இந்தியாவத் திரும்பி பாக்க வெச்சாரு. அவருக்குப் பின்னாடி ஒட்டுமொத்த இந்தியாவே போய் நின்னுச்சி. இத மட்டும் அவரு பண்ணல. எழுதி வேற வெச்சிருக்காரு. இவ்வளவையும் பண்ணிட்டு எழுபதாயிரம் பக்கங்கள் எழுதியிருக்காரு. இவ்வளவும் ஒரே ஆள் நாள செய்ய முடியுமா என்ன? இப்ப எழுபதாயிரம்னு கண்டுபுடிச்சிருக்காங்க. ஒரு வேல ஒரு லட்சம் பக்கங்கள் கூட வரலாம். யாருக்குத் தான் அவர நெனச்சா கடுப்ப இருக்காது. அவர் ஒரு எழுத்தாளனான என்னோட ஆளுமைய சின்னதா ஆக்குறாருல. அதனால தான்  அவர பத்தித் தப்பா எழுதிருக்கேன். தரம் குறைவா பேசியிருக்கேன். இப்போ நெனச்சி பாக்கும் போது எல்லாமே புரியுது” என்றார்.

            அவருக்கு இருமல் வந்தது. நான் ஓடிச் சென்று குடிக்க தண்ணீர் எடுத்து வந்தேன். அவர் தண்ணியை மல்லாந்து வாய்க்கு நேரே ஊற்றி மடக்கென்று குடித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெலிந்து போன உடம்பு. தலையில் முடியே இல்லை, நிச்சயம் எழுபதைத் தாண்டியிருப்பார் என்று தோன்றியது. வட்ட வடிவிலான மூக்குக் கண்ணாடியை அணிந்திருந்தார். வெள்ளை சட்டை, வேஷ்டி, ஊன்றி நடக்க கையில் ஒரு கோல். அவர் தண்ணீரைக் குடித்து விட்டு, மிச்சமிருந்த தண்ணீர் பாட்டலை அவர் வைத்திருந்த பையில் போட்டுக் கொண்டார். என்னைப் பார்த்து யாரையோ பார்ப்பது போல் பார்த்தார். “தம்பி நீங்க?” என்றார்.

            “சார் நான் தான் பட்டிமன்றத்துல பேசுனனே” என்றேன். அவர் தெரிந்து கொண்டார். “ஆமா, தம்பி தெரிது, நம்ப காந்தியப் பத்தி பேசிட்டு இருந்தோம்ல” என்று மீண்டும் இருமினார். பின்பு வாயைத் துடைத்துக் கொண்டார். “பாத்திங்களா தம்பி நா அவர  மகாத்மா காந்தினு கூட சொல்லல, வெறும் காந்தினு சொல்லிட்டு இருக்கேன். நெஜமாவ அவர் மகாத்மா தான். மகாத்மா காந்தி” என்று கூறி திரும்பி சென்றார்.

            எனக்குத் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்றிருந்தது. சிங்கியில் காரி துப்பினேன். ஒரு துளி கபம். மஞ்சளாய் இருந்தது. ஸ்வேதா பின்னாடியே வந்தாள். “என்னடா, ரொம்ப நேரம் அவர் கிட்டப் பேசிட்டு இருந்த போல, சரி அங்கே என்ன பாத்துட்டு இருக்க” என்று எட்டி சிங்கியில் பார்த்தாள். “அடச் சீ” என்று சொல்லிவிட்டு குழாயில் தண்ணீரைத் திறந்தாள். நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் கை கழுவி விட்டு கையிலிருந்த தண்ணீர்த்துளிகளை என் முகத்தில் தெளித்தாள். நான் முகத்தைத் துடைத்துக் கொண்டு, இருவரும் அரங்கத்தினுள் நுழைந்தோம். சற்று முன்பு அங்கே பேரிருக்கம் கொண்டிருந்த நான், இப்பொழுது இயல்பாயிருந்தேன். எங்கோ படித்த ஞாபகம். ஆணவம் என்பதே நான். அது நமது வெளிப்பாடு மட்டுமே. படமெடுக்கும் தருணங்களில் பாம்பு பிரிதொன்றாகிறது. ஆனால் வலைக்குள் சுருண்டு அமர்ந்திருக்கையிலே அஃது இயல்பாக இருக்கிறது. அப்பொழுது அதை நினைத்துக் கொண்டேன். இருவரும் வெளியே வந்து நின்று கொண்டிருந்தோம். நண்பர்கள் அனைவரும் தூரத்தில் வந்துக் கொண்டிருந்தார்கள்.

            “ஸ்வேதா, உங்கப்பாவோட வாத்தியார்னு ஒரு பெரியவர சொன்னியே, அதான் அந்த எழுத்தாளர். அவரு பேரு என்ன?” என்று கேட்டேன். ஸ்வேதா சிரித்துக் கொண்டே மெதுவாய் “காந்தி” என்றாள்.

(ஆறுதல் பரிசு: மலாயா பல்கலைகழக 36வது பேரவை கதைகள் போட்டி 2022)

Scroll to Top