கூலிமில் அமைந்திருக்கும் பாயா பெசார், இடைநிலைபள்ளியில், என் அலுவலகத்தில் அமர்ந்திருந்த பொழுது, மேலே சுற்றி கொண்டிருந்த மின்விசிறி சத்தமிட்டுக் கொண்டு எரிச்சல் பண்ணியது. அந்த சத்தம் மேலும் மேலும் கூடிச் செல்ல, கடுப்பாகி எழுந்து சென்று அதை ஆப் செய்தேன். பக்கத்திலிருந்த ஜன்னலை திறந்த பொழுது சில்லென்ற காற்று முகத்தில் பட்டது புத்துணர்வாய் இருந்தது. ஜன்னலிலிருந்து எட்டி வெளியே பார்த்தேன். நல்ல மழைபெய்திருந்ததால், சாலையெல்லாம் கொஞ்சம் நீர் தேங்கியிருந்தது. அப்படியே எட்டி என் காரை பார்த்தேன். ஒன்றும் ஆகவில்லை என்று உறுதிப் படுத்துக் கொண்டேன். எங்கள் பள்ளியில் ஆசிரியர் அலுவலகம் இரண்டாவது மாடியில் இருந்தது. திரும்பி சென்று அமர்ந்து செல்போனை எடுத்து குமாருக்கு போன் செய்தேன்.
‘ஏன்பா, நா அணிக்கே வந்து ஃபேன செய்ய சொன்னேன் தானே, ஒரே சத்தம் போட்டுட்டு இருக்கு, எப்ப வந்து செய்ய போற? அடுத்த வாரம் எனக்கு மீட்டிங் இருக்கு, முடிஞ்சா நாளைக்கே வாப்பா”, என்று சொல்லிவிட்டு, செல் போனை கீழே வைத்தேன். இன்றைக்கு எனக்கு வகுப்புகள் குறைவு தான். மாணவர் கட்டொழுங்கு ஆசிரியர் என்பதால், என் அறையில் மாணவர்கள் ஆஜராகிக் கொண்டேயிருப்பார்கள். அன்று யாரும் வராததால், வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த வெண்முரசு நாவல் தொடரை எடுத்து பிரித்து, நேற்று முடித்திருந்த அத்தியாயத்திலிருந்து தொடங்கினேன். நாவலின் பெயர் இந்திரநீலம். ஓவியர் சண்முகவேல் அற்புதமாக வரைந்திருந்த துவாரகை மாநகரின் ஓவியத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நாவலுக்கு ஏற்றாற்போல் தகுந்த முகப்பு ஓவியம். பிரம்மாண்டத்துடன் கூடிய கம்பீரமும், மற்ற பேரரசுகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் அறைகூவலும் ஒன்றென அமைந்திருந்தது துவாரகையின் பெருவாயில். மெய் மறந்து அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
பிறகு நாவலை புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். அது ஸ்ரீ கிருஷ்ணரின் போர்கள காட்சி. தன் படையாழியால் மற்ற வீரர்களின் தலைகளை சரமாரியாக அறுத்து வீசிக் கொண்டிருந்தார். கைகளிலும் முகத்திலும் ரத்தம் படிந்து நின்றுகொண்டிருந்த கிருஷ்ணன், புயல் போல, கொடு நோய் போல போர் புரிந்துக் கொண்டிருந்தது என்னை மெய்ப்புக் கொள்ள வைத்தது. மாடு மேய்க்கும் யாதவ குலத்தில் பிறந்த ஒரு இடையன், தன் வீரத்தால், ஆளுமையால், திறமையால், துவாரகை மாநகரை நிறுவி, தன் படைகலத்தால் எதிரிகளை நிர்மூலமாக்கி, மற்ற தொன்மையான க்ஷத்ரிய நாடுகளின் சமகாலத்திலே பேரரசனாக எழுந்து நிற்கிறார். அவரின் மகத்தான செயலூக்கமும், படைப்பாற்றலும் பிரமிக்க வைத்தது. எழுத்தாளர் ஜெயமோகன் தன் எழுத்தாலே துவாரகைக்கு அழைத்துச் சென்றதனால் அதிலே மூழ்கி போனேன்.
“சார் வணக்கம் சார், உள்ள வரலாமா சார்? என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தேன். மாணவர் தலைவன் ரவி வந்திருந்தான். நாவலில் மூழ்கிப் போயிருந்ததால் அவன் வந்து கூப்பிடும் பொழுது என் முகம் வெம்மைக் கொண்டிருப்பதுப் போலிருந்தது. ரவி ஒரு கணம் தயங்கியதைப் பார்த்தேன். ”என்ன ரவி, என்ன விஷயம்” என்றேன். “சார், கேண்டின்லே ஒரே சண்ட சார். மூர்த்தியும் இந்திரனும் சண்ட போட்டுக்குறாங்க. ஸ்வேதா டீச்சர் தான் வந்து தடுத்தாங்க. உங்கள கூப்டுறாங்க சார்”, “இப்ப எங்கே இருக்கானுங்க ரெண்டு பேரும்?” “சார் ரெண்டு பேரும் பிரின்சிபல் ஆபீஸ்ல இருக்கானுங்க, ஸ்வேதா டீச்சர் கூட அங்கே தான் இருக்காங்க, அப்புறம் அவுங்களோட ஆசீரமத்துக்கு கால் பண்ணிட்டாங்க சார், வந்துட்டு இருக்காங்களாம்” என்றான். நான் புத்தகத்தை மூடிவைத்து விட்டு, கழுத்து பட்டையை சரிசெய்து, செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
v
ஸ்வேதா என் மனைவி தான். நாங்கள் இருவரும் ஒரே ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம். சில வருடங்கள் வெவ்வேறு பள்ளியில் பணியாற்றிய பிறகு, இருவருக்கும் இதே பள்ளியில் வேலை கிடைத்தது. ஒரே காரில் தான் வருவோம். ஸ்வேதா பார்ப்பதற்கு அழகாயிருந்தாலும் மிக கண்டிப்பானவள். அவள் அதட்டல் குரலுக்கு படிவம் 5ன் கடைசி வகுப்பு மாணவர்களும் அடங்கிப் போவார்கள். நாங்கள் இருவரும் அப்பள்ளியில் மாணவர் கட்டொழுங்கு ஆசிரியர்கள். ஸ்வேதா சென்று அந்த சண்டையை தடுத்திருக்கிறாள் என்பது ஆச்சரியமில்லை. தடுக்க கூடியவள் தான்.
இந்திரனும் மூர்த்தியும் இரட்டையர்கள். முக ஒற்றுமையால் நான் பல தடவை குழம்பி போயிருக்கிறேன். எங்கே என்ன பிரச்னை நடந்தாலும் அவர்களின் வருகை அங்கே இருக்கும். இருவரும் பள்ளியில் பிரபலமானவர்கள். இரண்டு குழுக்களாக பள்ளியின் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களும் பிரிந்திருந்தனர். எண்களை கொண்டு அவர்கள் தங்களை அடையாளம் சொல்லிக் கொள்வார்கள். 35, 36 என்றும், சிவப்பு பச்சை நிறங்களைக் கொண்டு தங்களை இன்னார் கேங் என்று மார்தட்டும் மாணவர்களை நான் பலமுறை கண்டித்துள்ளேன். ‘மூர்த்தி பாங்’ மற்றும் ‘இந்திரா பாங்’ என்று அவர்கள் பரவலாய் மாணவர்களிடையே அறியபடுபவர்கள்.
v
பள்ளி முதல்வரின் அறையில் நுழையும் போது ஸ்வேதா ஏற்கனவே அங்கே வந்திருந்தாள். இந்திரனும் மூர்த்தியும் வேறு சில மலாய்கார மாணவர்களும் இருந்தனர். திரும்பி பார்க்கையில் புதிதாய் மூன்று நபர்களும் வந்திருந்தனர். மாணவர்களின் பெற்றோர்களாய் இருக்க வேண்டுமென்று எண்ணி ஸ்வேதா பக்கத்தில் போய் நின்றேன். அவள் காதில் மட்டும் கேட்கும்படியாய் முனுமுனுத்தேன். “யாரிவுங்க, புதுசா இருக்காங்க, பிரச்சனை ஒன்னுமில்லையே?” என்றேன். “இல்ல பிரச்னை வரும்னு தான் நெனக்கிறேன். இதோட நாலாவது வாட்டி கேஸு, டிஸ்மிஸ் பண்ணிருவாங்கனு நெனக்கிறேன்” என்றாள்.
“கேண்டீன்ல சரியான சத்தம். போயி பாத்தா இவனுங்களுக்கும் அந்த ரெண்டு மலாய்கார பையன்களுக்கும் சண்ட. எல்லா மலாய்க்கார பையன்களும், தமிழப் பையன்களும் எதிர் எதிரா நின்னுகிட்டு கூச்சல் போட ஆரம்பிச்சிடானுங்க, நல்ல வேல நா போனேன். இல்லனா மதகலவரம் சண்டைனு கிளப்பி விட்ருபானுங்க” என்றாள் ஸ்வேதா. நான் திரும்பி மாணவர் தலைவனை பார்த்து வகுப்பறைக்கு போகச் சொன்னேன். பள்ளி முதல்வர் பாண்டியன் அந்த இரண்டு மலாய்கார மாணவர்களை திருப்பி வகுப்பிற்கு அனுப்பி விட்டார். வந்திருந்த மூன்று பேரையும் சேர்த்து நாங்கள் எட்டு பேர் அந்த அறையில் இருந்தோம். பாண்டியன் சார், இருக்கையிலிருந்து எழுந்து வந்து, மூர்த்திக்கும் இந்திரனுக்கும் ஓங்கி இரண்டு அறை கொடுத்தார். உண்மையில் இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
“ஏண்டா, உங்கள படிக்க ஸ்கூலுக்கு அனுப்புனாங்களா, இல்ல சண்ட போடறதுக்கு அனுப்புனாங்களா? எப்ப பாத்தாலும் உங்க ரெண்டு பேராலதான் பிரச்சனை. ஸ்கூலுக்கு வந்தா சண்ட, இல்லனா ஸ்கூலுக்கு வர்றது இல்ல, என்னடா நெஞ்சுகிட்டு இருக்கீங்க? இது என்ன உங்கப்பனோட ஸ்கூலுன்னு நெனசிங்களா. அது சரி, அத எப்டி சொல்றது, உங்க ரெண்டு பேருக்குதா அப்பனே இல்லையே. அப்போ எப்டி புத்தி வரும். உங்கம்மா ஒரு ஓடுகாலி நாயி. பெத்துட்டு தூக்கி போட்டு போய்டா. உங்கள ஆசிரமோ வெச்சி பாத்துக்குது. வேலா வேளைக்கு சோறு, தண்ணி, சாப்பாடு கொடுக்குறதால கொழுப்பு வெச்சி போயிருச்சில, நல்ல குடும்பத்துல பொறந்தா ஒழுங்கா இருப்பீங்கடா. ஒடுகாலிக்கு பொறந்து, இங்க வந்து சேந்து, எங்க உயிரை வாங்கிட்டு இருக்கீங்க. சனியனுங்களா. வெளிய மூஞ்ச காட்ட முடிதா, தோ இப்ப மலாய்காரனுங்க கூட சண்ட. நாளைக்கு அவுங்க அப்பாவ கூட்டிட்டு வரப் போறான். அவன் அப்பன் போலீசு, என்னடா பண்ண போறீங்க. எப்ப பாரு சண்டனா நம்ம ஆளுங்க தான் வந்து நிக்கிறிங்க. உங்கள எல்லாம் ஸ்கூல்லே வெச்சிருக்க கூடாதுடா, நல்ல அம்மாவுக்கு பொறந்தா இப்படி பண்ணுவிங்களா, ஆனாத பயலுங்களா” என்று கோபத்துடன் சரமாரியாக திட்டினார். இந்திரனும் மூர்த்தியும் தலை குனிந்து நின்றிருந்தார்கள்.
எனக்கு என்னவோ யாரோ வந்து என் பிடரியில் ஓங்கியடித்தது போன்ற உணர்வு. தலை முடியை வருடிக் கொண்டேன். “சார் ஆனாதைங்கனு திட்டாதிங்க. நீங்க யாரு சார் அவனுங்க அம்மா அப்பா பத்தி பேச? எல்லாத்துக்கும் இங்க எல்லாமே கெடக்கிறது இல்ல சார். ஆசிரமதிலுருந்து வந்த பையனுங்கனா என்ன வேணாலும் பேசிரலமா? இதே சாதாரண குடும்பதிலிருந்து வந்த பையன்னா கைய நீட்டிருப்பீங்களா சார்? இல்லதானே, இவனுங்கள அடிச்சா இங்கே யாரும் வந்து கேக்க போறது இல்ல. சோ இஷ்டத்துக்கு அடிக்கலாம், என்ன வேணாலும் பேசிரலாம். அவனுங்கல என் கிட்ட விட்டுருங்க நா பாத்துக்குறேன். மோத ஒருத்தவுங்க கிட்ட எப்டி பேசணும்னு கத்துகோங்க சார். வாங்கடா ரெண்டு பேரும்”, என்று மூர்த்தியையும் இந்திரனையும் நோக்கி சொல்லிவிட்டு வேகமாக பள்ளி முதல்வரின் அலுவலகத்திலிருந்து வெளியேறினேன். என் பின்னே படாரென்று கதவு மூடும் சத்தம் கேட்டது.
போகும் முன் ஸ்வேதாவின் முகத்தை பார்த்து விட்டுதான் வெளியேறினேன். அவள் வாயடைத்து போயிருந்தாள். நான் கோபப்பட்டு அவள் பார்த்ததில்லை. என் பின்னே தான் அவர்கள் இருவரும் வந்துக் கொண்டிருந்தார்கள். என் அறைக்குள் நுழைந்ததும், மேஜை மீதிருந்த நாவலை நகர்த்தி விட்டு அமர்ந்தேன். திறந்திருந்த ஜன்னலின் வழி காற்று உள்ளே வீசிக் கொண்டிருந்தது. மூவரும் அமைதியாயிருந்தோம். உச்சிதலையை தொட்டிருந்த என் கோபம் இன்னும் இறங்கவில்லை. பதற்றத்தில் உள்ளங்கைகள் வியர்த்திருந்தது. மூச்சி ஏறி இறங்கி முகம் சிவந்திருந்தது. காது மடல்களிலும், பிடரியிலும் பரவியிருந்த உஷ்ணம் இன்னும் குறையவில்லை. மூவரும் அமைதியாயிருந்தோம்.
“சார் நாங்க ஒண்ணுமே பண்ணல சார். அவனுங்க தான் வந்து வம்பிலுத்தானுங்க சார்” என்ற மூர்த்தியை நிமிர்ந்துப் பார்த்தேன். இருவரும் தலை குனிந்தார்கள். “இனிக்கி ஸ்கூல் முடிஞ்சி நடந்து போவிங்க தானே, வேணாம் நா கொண்டு போயி விடுறேன்” என்று கூறிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டேன். பத்து நிமிடத்தில் பள்ளி முடியும் மணியொலி கேட்டது. பேக்கை எடுத்துக் கொண்டு காருக்குச் சென்றடைந்து உள்ளே அமர்ந்தேன். குளிரிலும் எனக்கு வியர்த்திருந்தது. மூர்த்தியும் இந்திரனும் வந்தவுடன் காரில் ஏறிக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் ஸ்வேதாவும் வந்து காரில் ஏறி அமர்ந்தாள். ஒருவரும் பேசிக் கொள்ளவில்லை. நான் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
கார் முன் கண்ணாடியில் அவர்கள் இருவரையும் பார்த்தேன். ஒருவன் இந்த மூலையிலும், இன்னொருவன் மறுபுறம் ஓரத்திலும் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் பேசிக் கொள்ளவில்லை. “டேய் உங்களுக்கு எத்தன தடவ சொல்றது. பதினேழு வயசாவது, இந்த வருஷம் எஸ்.பி.எம். வேற, ஒழுங்கா படிச்சா தான் என்ன? ஒருவேள டிஸ்மிஸ் பண்ணாங்கனா என்ன பண்ணுவிங்க ரெண்டு பேரும்?” என்றேன். இருவரும் பதில் இல்லாமல் அமைதியாயிருந்தார்கள். பிறகு நானும் ஏதும் பேசாமல் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.
ஆசிரமம் வந்தவுடன் காரை நிறுத்தினேன். மூவரும் இறங்கி ஆசிரமத்தின் சுவாமி அலுவலகம் நோக்கி நடந்தோம். மரங்களும், செடிகளும் சூழப் பார்ப்பதற்க்கு அவ்வளவு அழகாயிருந்தது. தியான ஆசிரமம், கூலிமில் பிரபலமானதும் கூட. கொஞ்சம் சில மாற்றங்கள் செய்திருந்தார்கள். முன்பு அங்குப் பார்த்த மரம் இல்லாமல், இப்பொழுது வேறு செடி வளர்ந்திருந்தது. ஒரு பையன் அங்கே குனிந்து இலைகளைக் கூட்டிக் கொண்டிருந்தான். ஆசீரமத்தின் கட்டிடதிற்க்கு முன்பு பார்த்த வெள்ளை நிறமில்லை, மென்மையான ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றியிருந்தார்கள். உள்ளே நுழைந்தவுடன், அம்மன், முருகர், விநாயகர், சிவன், நவக்கிரகங்கள் என நிறைந்திருந்தார்கள். எல்லாம் அப்படியே இருந்தன. ஒன்றும் மாறாமல். அங்கிருந்து ஒவ்வொன்றாய் தொட்டு எடுத்து என் நினைவுகளை மீட்டெடுக்க முடியும். ஆனால் ஏனோ அம்மனை மட்டும் கும்பிட்டு விட்டு, சுவாமியின் அலுவலகம் நோக்கி நடந்தேன். அலுவலகத்தில் நுழைந்தவுடன் கண்கள் முதலில் சுவாமியைத் தேடின. அவர் அங்குதான், முன்பு பார்த்த அதே மேஜையில் அமர்ந்திருந்தார். சுவாமியைப் பார்த்தவுடன் ஒரு பிரமிப்பு. அப்படியே இருந்தார். தலையில் மட்டும் நரைக் கூடியிருந்தது. நான் அங்கு வந்து பத்தாண்டுகள் கடந்திருக்கும். சுவாமியின் வேகம் இன்னும் குறையவில்லை. கண்களும் மனமும் சோர்வடையவில்லை. என்னை பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
“வாப்பா ருத்ரா, எப்படியிருக்க, ரொம்ப நாள் ஆச்சுப்பா பாத்து, எப்ப கடைசியாய்ப் பார்தேன், தெரிலயே. சரி வா, டீ சாப்பிட்டு போ”, என்றுக் கூறி எழுந்தார். அப்பொழுது தான் கைக்கடிகாரதைப் பார்த்தேன். மணி மாலை 6 ஆகி இருந்தது. ஸ்வேதாவையும் நலம் விசாரித்தார். “சரி என்ன விஷயம்பா, இவனுங்க ஏதாவது ஸ்கூலுலே கோளாறு கொடுத்தாங்கலா?” என்று இருவரையும் கை நீட்டிப் பேசினார். “ஆமா சுவாமி , அதான் நேரா அங்கிருந்து நானே கூட்டி வந்தேன். சொன்னா எங்க கேக்குறாங்க, ஒரே சண்ட, நீங்க கொஞ்சம் பேசுங்க சுவாமி”, என்று சொல்லி முடித்தேன். இருவரும் தலை குனிந்து நின்றிருந்தார்கள். சுவாமி பேசினார். “டேய், என்னடா பிரச்சனை பண்ணிங்க இனிக்கி, சும்மா இருக்க மாட்டிங்களா ரெண்டு பேரும்”, என்று செல்லமாக இருவரது முதுகிலும் தட்டி விட்டு வெளியே சென்று விட்டார். சுவாமி மாறவேயில்லை. நான் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த பொழுது, என்னை எப்படி கண்டித்தாரோ, அப்படியே தான் இப்பவும் இருந்தார்.
அவர் திரும்பி வருகையில் கையில் இரண்டு டம்ளரில் டீ இருந்தது. அதை எங்களிடம் கொடுத்தார். டீ சூடாயிருந்தது. “ஏன்டா இப்படியெல்லாம் சண்ட போட்டுக்கிருங்க. படிப்பு மட்டும் தான் இங்க சோறு போடும். பாரு உங்க ருத்ரா சாரும் இங்க இந்த ஆசிரமத்துல தான் வளந்தாறு. உங்க வயசுல, உங்கள மாறி தான். எப்ப பாத்தாலும் சண்ட, அடிதடி கேஸுனு அவரு பள்ளியிலே எங்கள கூப்டுகிட்டே இருப்பாங்க. சொன்னா கேக்கவே மாட்டாரு. உங்கள மாறி தான் அவருக்கும் அம்மா அப்பா இல்ல, இப்ப பாரு நல்லா படிச்சி, ஒரு டீச்சரா இருக்காரு. அவர மாதிரி வாங்கடா”, என்று கூறிவிட்டு என்னிடம் திரும்பி “ருத்ரா நீ பேசிட்டு இரு, எனக்கு கொஞ்சம் வேலயிருக்கு, தோ வந்துட்றேன்”, என்று திரும்பி சென்றார்.
நான் திரும்பி ஸ்வேதாவை பார்த்தேன். அவள் என்னைத்தான் நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஏதோ தெரிந்தது. நான் முதன் முதலில் அவளிடம் காதலை சொன்னபோது அப்படி தான் பார்த்தாள். நான் மெல்ல புன்னகைத்துவிட்டு திரும்பிக் கொண்டேன். மூர்த்தியும் இந்திரனும் என்னை நிமிர்ந்துப் பார்த்தனர். “சார் நீங்க இங்கயா இருந்தீங்க? எப்படி சார் ஆசரமத்துல இருந்து டீச்சர் ஆனிங்க?”, என்றனர். நான் அவர்களிருவரையும் பார்த்தேன். “டேய் ஏன் இங்க இந்த மாறி இருந்தா உங்கலாள சமுதாயத்துல முன்னேறி வர முடியாதா? இல்ல நல்லா படிக்க முடியாதா? ஒன்னு சொல்றேன், நல்லா கேட்டுக்குங்க. ஏன் நம்ம வாழ்க்க இப்படியாச்சி, நம்மள ஏன் இங்க வந்து விட்டுடாங்க, அன்பு கெடக்கில, பாசம் கெடக்கில, அங்கீகாரம் கெடக்கிலன்னு நெனச்சுட்டு இருந்தா, ஒண்ணுமே சாதிக்க முடியாது. உனக்கு உடல் ஊனம் இல்லாம படைச்சிருக்கான்ல, அது போதும். வேற என்ன வேணும்? நம்ம வேலையெல்லாம் நல்லா படிச்சி முன்னேறுறது தான். ஏன் நீங்க இப்படி கேங், அப்றோம் சண்ட போடுறிங்க தெரியுமா? சும்மா அட்டென்சன் சீக்கிங், அவ்ளோதான். நல்லா படிச்சி, நல்லா மார்க் வாங்குன கூடத்தான் அட்டென்சன் கெடக்கும். அதுக்குன்னு மத்தவுங்களுக்கு பரூவ் பண்ணி தான் வாழணும்னு வாழாத, உனக்கு நீயே நிரூபிச்சிகிட்டா போதும். உன்ன வேற யாரவது வந்து தூக்கி விடுவாங்கனு நெனக்காத, கீழ தள்ளி உடத்தான் பாப்பாங்க, சோ, நீதான் இதையெல்லாம் ஒடச்சி கடந்து மேல நீந்து வரணும். என்ன புரியுதா?”. என்றேன். இருவரும் தலையாட்டினார்கள்.
பிறகு இருவரையும் கட்டியணைத்து விட்டு வெளியே போகச் சொன்னேன். அதற்குள் ஸ்வேதா அவர்களை இடைமறித்து “டேய், இங்க எவ்ரி சனிக்கிழமை மகாபாரதம் வகுப்பு நடக்கும் தானே, உங்களுக்கு அதுல யார புடிக்கும்?”. என்று கேட்டாள். இருவரும் கர்ணன் என்றார்கள். அவர்கள் சென்றவுடன் ஸ்வேதா எழுந்து வந்து என் தோல் மீதி கை வைத்தாள். நான் அமர்ந்திருந்தபடி திரும்பி அவளைப் பார்த்தேன். என்னை பார்த்து புன்னகைத்தபடி “லவ் யூ”, என்றாள். நான் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என் தோல் மீதிருந்த அவள் கைகளை தொட்டேன். சுவாமி மறுபடி உள்ளே நுழைந்தார். அவரிடம் அதே குழந்தைத் தனமான சிரிப்பு. திடீரென்று வெடிது சிரிப்பார். கொஞ்ச நேரம் அவரிடம் பேசிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு காரில் வந்தேறினோம்.
காரில் அமர்ந்தவுடன் சிறு வயது நாட்கள், சேட்டைகள், விளையாட்டுக்கள், சமய வகுப்புகள், சுவாமியின் அடிகள், என எல்லாம் நினைவுகளை வருடிச் சென்றன.
“என்ன ரொம்ப பலமா யோசிச்சிட்டு இருக்க?”, என்ற ஸ்வேதாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். ஒரு சிறுப் புன்னகையோடு அந்நினைவுகளை கடந்துச் சென்றேன். “இனிக்கி ரொம்ப கோவபட்டுட்ட ருத்ரா, பாண்டியன் சார் கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது”, என்றாள். “இந்த மாறி ஆளுகிட்ட எல்லாம் இப்படி தான் பேசுனும். ஆசரமத்து பையனுங்க நா கீழ்தரமா பாக்கறது, ஒதுக்குறது, நல்லா வேல வாங்குறது. அணிக்கி பாக்குறேன், பள்ளியில ஒரு ஆசிரம பையன் குனிஞ்சி குப்பையெல்லாம் அள்ளிட்டு இருக்கான், அவன் மட்டும் தான் அழுக்கான எடத்துல எல்லாம் வேல செய்யனும், மத்தவுங்க எல்லாம் வேடிக்க பாத்துட்டு இருந்தாங்க, இன்க்ளுடிங் டீச்சர்ஸ்”, என்றேன். அவள் ஒன்றும் பேசவில்லை. பின்பு திரும்பி பின் இருக்கையின் ஓரத்தில் இருந்த ஜெயமோகனின் வெண்முரசு நாவலை எடுத்தாள். ”இது என்ன புது நாவலா?..ம்ம்..இந்திரநீலம். நல்லா இருக்கே இந்த ட்ரோவிங், நா இந்த நாவல் வரிசைல முதல் புத்தகம் முதற்கனல வாசிச்சிட்டேன். ப்பா, என்னாமா எழுதுரிக்காரு ஜெயமோகன். சரி இது என்னத்த பத்தி, யாரு ஹீரோ இந்த நாவல்ல”, என்று கேட்டாள்.
“கிருஷ்ணர்தான், எப்படி அவரு எட்டு பொண்ணுங்கள கல்யாணம் பன்னிருக்காருனு எழுதிருக்காரு”, என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். “என்னது எட்டு பேரா? இப்ப உள்ள பாய்ஸ்க்கு ஒரு பொண்ணயே சமாளிக்க முடிலயே, அவரு எப்படித்தான் எட்டு பேர சமாளிச்சிருப்பாரோ“, என்று கேட்டுவிட்டு “சரி உனக்கு மகாபாரதத்துல கர்ணன் தானே புடிக்கும். உங்கள பாக்கும் போது எல்லாம் எனக்கு அவரு தான் தோணும். உங்கள மாறி தான், கஷ்ட்டமான வாழ்க்கை அவருக்கு. கிடைக்க வேண்டியது எல்லாம், சரியான வயசுல கிடைக்கில, அம்மாவோட அன்பு, அங்கீகாரம். அவுங்க சொந்த தம்பி அத்தனை பெரும் அவர வெறுத்தாங்க. ஆனா அத எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, அவர் போய்கிட்ட இருந்தாரு. ஹி இஸ் எ கிரேட் வார்ரியர். உங்களுக்கும் கர்ணன் தானே புடிக்கும்?”, என்று கேட்டாள்.
நான் மெதுவாய் சிரித்து விட்டு “கர்ணன் எனக்கு புடிக்கும் தான். அதவிட கிருஷ்ணன ரொம்ப புடிக்கும். கர்ணன் வாழ்நாள் முழுக்க அங்கீகாரதுக்காக வாழ்ந்தான். அவன் கிட்ட எப்போதும் ஒரு கசப்பு இருக்கும் இந்த வாழ்க்க மேல. உள்ளுக்குள்ள எரிஞ்சிகிட்டே இருப்பான். அவன் ஏன் அவ்ளோ தான தர்மம் செஞ்சான் தெரியுமா, பிகோஸ் அவனுக்கு அதெல்லாம் கிடைக்கல, அதனால மத்தவுங்களுக்கு கொடுத்து அந்த ஏக்கத்த சரி பண்ணிக்கிட்டான். நீ எப்போதும் எதையோ நெனச்சி, உள்ளூர பொலம்பிக்கிட்டு, வன்மத்த உள்ள வெச்சி இருந்தா, உனக்கு எப்டி அமைதி கிடைக்கும்? அதனால தான் கீதை அர்ஜுனனுக்கு சொல்லபட்டுச்சி”, என்றேன். ஸ்வேதா திரும்பி என்னை பார்த்தாள். “மேக் சென்ஸ், சோ உனக்கு அப்றோம் வேறே யார புடிக்கும்?”, என்றாள்.
“கர்ணனோட வாழ்க்க மாறியே தான் கிருஷ்ணனோட வாழ்கையும். நீ கூர்ந்து மகாபாரதத்த படிச்சா உனக்கு தெரியும். இன்னோ சொல்ல போனா கர்ணனவிட கஷ்டமான வாழ்க்க கிரிஷ்ணருக்கு. அவரு என்ன உக்காந்து அழுது கிட்டா இருந்தாரு? நம்ப அவர கடவுளா பாக்காம சாதாரண மனுஷனா பாப்போமே. ஒத்த ஆளா நின்னு ஒட்டு மொத்த மகாபாரத போரையே நடத்தி முடிச்சாரு. ஆனா அவரு கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது வேற. எல்லாத்தையும் நடத்தி, எல்லா விஷயத்துலயும் தன்னை நுழைச்சிகிட்டு, அப்றோம் அதுலேந்து வெளியே போயி நின்னு, எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லனு இருக்காரு பாரு. யார்னால முடியும் அந்த மாறி? அவரோட துவாரகை நகர கட்டும் போது, அவருக்கு நல்லாவே தெரியும், அது ஒரு நாள் அழிய போதுனு. ஆனா அத அவரு செஞ்சாரு. செயல். அது தான் அவரோட ஒரே ஆயுதம். ஆனா எல்லாத்தையும் தொறந்து, இது போதும்னு ஒரு மனநிலை வரணுமே. இதுவரைக்கும் புரிஞ்சிக்க முடியாத அவனை புரிய வெக்கறதுக்கு அவன் தான் இன்னொரு பிறவி எடுத்து வரணும் போல. அவரு வேற மாறி, புரிஞ்சிக்க முடியாத ஒரு ஆள். சோ எனக்கு கிருஷ்ணர் தான் புடிக்கும்”, என்று கூறி என் காரின் முன் சின்னதாய் ஒட்ட வைத்திருந்த ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவ சிலையைப் பார்த்துக் கொண்டேன்.
(முதலாம் பரிசு: மலாயா பல்கலைகழக 36வது பேரவை கதைகள் போட்டி 2022)