புது தொடக்கம் இது. முதல் அடி. ஆரம்ப முயற்சி. அதில் என் ஞானாசிரியரும் இலக்கிய ஆசானும் ஒன்றிணைந்து நிற்க, அவர்களை மனதில் இருத்தி எழுதிய கடிதம். அதை முதற் பதிவாய் போட வேண்டுமென்ற எண்ணம். என்றுமிருக்க போகும் பதிவு இது. இன்னும் சரியாக பத்தாண்டுகளில் மீண்டும் இதை வாசிக்கும் பொழுது, இன்று எழும் அதே புன்னகை அன்றும் மலர்ந்தால், மனம் கனியும்.
பாலைவன விதைக்கு ஆற்றல் அதிகம். அதன் முன் தோன்றி அழிந்த பல்லாயிரம் கோடி விதைகளின் கண்ணீரையும், அகக் குமுறல்களையும் தன்னுள் செலுத்தி மண்ணில் எழும் விதை அது. மேலே வருவது கிளை விரித்து, வான் பரவபோகும் விதை. அதை என்னுள் விதைத்த எல்லா ஆசிரியர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும்.
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,
வணக்கம் சார். நலமா?
மாபெரும் மலையை ஏறிக் கடந்து, மீண்டும் கீழிருக்கும் அதே பள்ளத்தில் விழுந்து, மீண்டும் மலையேற மனம் ஒப்புமா? அல்லது பெரும் சமுத்திரத்தை நீந்திக் கடந்த பின்னரும் மீண்டும் அதில் பாய்ந்து நீந்தி வர மனம் ஏற்குமா?
இப்போதைய என் மனநிலை இப்படி தான் இருக்கிறது சார். எனக்கு 26 வயது. சுவாமி பிரம்மானந்தரின் மலேசியா கூலிமில் அமைந்திருக்கும் தியான ஆசிரமத்தில் இருக்கிறேன். உங்கள் அன்றாட வாசகன். உங்கள் வலைத்தளத்தை தினமும் படித்துவிடுவேன். எத்தனையோ முறை எழுதலாம் என்று நினைத்தும் மனம் அதற்கு ஒப்பாது தயங்கியிருக்கிறேன். இன்றும் அதே மனநிலை தான். ஆனால் இன்று எழுதி விட்டேன். முதலில் உங்களை வந்தடைந்தது பற்றி சொல்கிறேன். திருட்டுத்தனமாகத்தான் உங்களை வந்தடைந்தேன். கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும். எனக்கு 16 வயதிருக்கும்பொழுது முதலில் சுவாமி அவர்களின் சொற்பொழிவை கேட்டேன். இங்கே ஆசிரமத்தில் இருப்பதால் வாரந்தோறும் வியாழக்கிழமை ஸ்வாமியின் பகவத் கீதை சொற்பொழிவு வகுப்பில் அமர வேண்டும். உங்கள் பெயரை அடிக்கடி ஸ்வாமியின் உரையில் கேட்பேன். உங்களை சிலாகித்து, விதந்தோந்தி அவர் பேசும் பொழுதெல்லாம் தாங்கள் யார் என்ற ஒரு சின்ன curiosity இருக்கும்.
சிறுவயதிலிருந்தே நூல் வாசிக்கும் பழக்கம் இருப்பதால் எழுத்தாளர்கள் பற்றிய ஒரு ஆர்வம் எனக்குள் எப்பொழுதும் இருக்கும். அப்படி யார் தான் நீங்கள் என்று, ஸ்வாமிக்கு ரொம்ப புடிச்ச எழுத்தாளரா இருக்காரே என்று உங்களின் நினைப்பு சுவாமி பேசும்போதெல்லாம் தோன்றி இருக்கும் என்று நினைக்கிறன். அப்படி ஒரு நாள் ஸ்வாமியின் அலுவலகத்தில் உங்களின் ஒரு நூலை காண நேர்ந்தது. அனல்காற்று குறுந் நாவல். அட்டைப்படம் பிடித்து போக சுவாமியிடம் படிப்பதற்காக கேட்டேன். சுவாமி மறுத்து விட்டு வேறொரு நூலை தந்தார். கன்னியாகுமரி என்ற நூல். ஆனால் அனல்காற்று படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை. உங்கள் நூலை படிக்க தோன்றியது சுவாமி என்னிடம் மறுத்த விதம் தான். இதெல்லாம் உன்னோட வயசு பையனுங்க படிக்க கூடாதுனு சொல்லிவிட்டார். அப்படி சொல்லும் போதே அதில் ஏதோ ஒன்னு இருக்கும்னு எனக்கு தோன்றியது. வயசு கோளாறுல. ஒரு வேல 18+ புக்காயிருக்குமோனு நெனச்சிட்டேன். என்னுடைய நல்ல நேரம் சுவாமி மறுநாள் இந்தியா கிளம்பி விட்டார். சுவாமி நிச்சயம் இதை படிப்பார். பெரியோர்கள் சில விஷயங்களை மறுக்கிறார்கள் என்றால், அதற்கு பின் காரணங்கள் இருக்கும். என் வயதிற்கு அது புரியாதே, அதனால் இங்கேயே மன்னிப்பு கேட்டு விடுகிறேன். மன்னிச்சிருங்க சுவாமி.
சுவாமி இந்தியா சென்றவுடன் அந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்தவுடன் நாவல் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. வேறெதுவும் செய்ய முடியவில்லை. இரண்டே நாளில் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடன் ஒருவகையான பித்து மனநிலை. அப்பொழுது ஒரு பெண்ணை விரும்பிக் கொண்டிருந்தேன். அவளிடம் அந்த புத்தகத்தை தந்து வாசிக்க சொன்னேன். ஒரு வாரம் கழித்து என்னிடம் திரும்பி கொடுத்தாள். அப்பொழுது அவள் கண்களை பார்க்கும் பொழுது ஏதோவொன்று என்னை திடுக்கிட வைத்தது. இன்றுவரை அந்தப் பார்வையை மறக்கவோ, புரிந்துக்கொள்ளவோ என்னால் முடியவில்லை. பார்க்கும் பெண்கள் அனைவரும் அனல் காற்றின் கதாபாத்திரங்களாய் தெரிந்தனர். அனல் காற்று என்னுள் பற்றிக் கொண்டது. ஆனால் என் எண்ணம் முழுதும் நீங்கள்தான். இதற்கு முன் சுமாரான கதை புத்தகங்கள், சிறுவர்களுக்கான ராமாயணம் மஹாபாரதம் போன்று வாசித்திருந்தாலும், என்னை அதிர்ச்சி அடைய வைத்த நூல் அனல் காற்று தான். ஒருவரால் இப்படி எழுத முடியுமா என்ற கேள்வி என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. என் நண்பர்களிடம் எல்லாம் இதை சொன்னேன். ஒருத்தனும் காதில் வாங்கி கொள்ளவில்லை. உங்களை இப்படி தான் வந்தடைந்தேன். என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன் பிறகு உங்களை வாசிக்கவில்லை. பிற ஆங்கில சாகச நாவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். நாட்கள் கடந்து, எனக்கு அப்பொழுது 19 வயது. சுவாமி எங்கிருந்தோ உங்களின் வெண்முரசு நாவல் வரிசையின் பத்து நூல்களை வாங்கி வந்திருந்தார். பார்ப்பதற்கே மலைப்பாயிருந்தது. அவ்வளவு தடிமனான புத்தகங்களை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. தினமும் ஸ்வாமியின் அலுவலகத்தை கூட்டி பெருக்கையில் அதை பார்ப்பேன். அட்டைப்படமும் அதன் பிரம்மாண்டமும் என்னை மலைக்க செய்யும்.
ஒரு நாள் சுவாமி உங்களின் அறம் சிறுகதை தொகுப்பை தந்தார். அதை வாசித்து முடிக்கையில் பல நிகர் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம். அதுவெல்லாம் உணர்ச்சிகரமான நாட்கள். பின் ரப்பர், காடு, யானை டாக்டர், வெள்ளை யானை என்று வாசித்து முடித்தேன். அதன் பிறகு உங்களை பல நாள் வாசிக்கவில்லை. நீங்கள் என்னுள் புகுந்து எதையோ செய்கிறீர்கள் என்ற மனநிலை ஏற்பட்டது. என் இயல்புதன்மை என்னை விட்டு அகல்கிறது என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் எழுத்தை பற்றி என் நண்பரகள் யாரிடமும் பேச முடியவில்லை. பேசினால் அவர்கள் அதை சட்டை செய்வதுமில்லை. பல மணி நேரம் ஆழ்ந்த சிந்தனை. கற்பனைவோட்டங்கள் என எனக்கான ஒரு உலகத்தை கற்பித்துக் கொண்டேன். அங்கு நான் தான் எல்லாம். அப்பொழுது படிவம் 6 பயின்றுக் கொண்டிருந்தேன். மெதுவாக தன்னிலையை இழப்பதை உணர்தேன். நான் விரும்பியவளும் அப்பொழுது என்னோடு இல்லை. உன்களை வாசிக்கும் பொழுது, மீண்டும் திரும்ப அவளின் நினைவுகள் என்னை வீழ்ச்சி அடைய செய்தது. உங்களை மீண்டும் வாசிக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதன் பிறகு உங்களை வாசிக்கவே இல்லை.
பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2018 இல், 22 வயதில், மீண்டும் உங்கள் வெளிக்குள் என்னை அறியாமல் வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆசிரமத்தில் நடக்கும் சமய முகாமிற்கு சுவாமி அவர்கள் ஒரு நாடகம் போட சொன்னார். மகாபாரதம் தழுவிய நாடகம். அப்பொழுது தான் உங்களின் வெண்முரசின் அறிமுகம். முன்பு சிறுவயதில், அதை படிக்க நினைக்கும் போதெல்லாம் வரும் மலைப்பு, அதன் அட்டை படத்தை தடவி பார்ப்பது, அந்த புத்தகத்தை திறந்து அதன் மணத்தை முகர்ந்து பார்ப்பது என்று என்னுள் அப்போது ஏகப்பட்ட எண்ண அலைகள். முதற்கனலை திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். முதலில் ஒன்றுமே புரியவில்லை. பிறகு மெதுவாக என்னை அதற்கு ஒப்படைத்தேன். பீஷ்மருக்கும் அம்பைக்குமான சந்திப்பு உரையாடல்கள் தான் நாடகத்தின் பிரதான கரு. நாடகம் சிறப்பாக நடந்தேறியது. ஆனால் தொடந்து முதற்கனலை என்னால் வாசிக்க முடியவில்லை. இடையில் எனக்கு நாடகம் மற்றும் கலைத்துறையில் இளங்கலை பட்டம் படிக்க பல்கலையில் இடம் கிடைத்து, அங்கு சென்று விட்டேன். வெண்முரசு என்னுள் அறுபடா ஒரு மாபெரும் உலோக சங்கிலியென எப்பொழுதும் என் நினைவில் வந்துக் கொண்டே இருக்கும்.
2020இல் lockdown போட்டது உலகத்திற்கு திருப்பு முனையோ இல்லையோ, எனக்கு என்னுள் மகத்தான மாற்றத்தை கொண்டு வர போகிறது என்று தெரியாது. பல்கலையில் எங்களுக்கு 6 மாதம் விடுமுறை கொடுத்து விட்டார்கள். ஆசிரமத்திற்கு திரும்பி வந்தேன். நான் தேடாமலே மீண்டும் வெண்முரசு என்னை வந்தடைந்தது. வெண்முரசை படிக்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. சுவாமியின் புத்தக அலமாரியை சுத்தம் செய்ததில் மீண்டும் வெண்முரசை கையில் எடுத்தேன். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் எல்லாம் ஏதோ ஒரு ஊழின் விளையாட்டு போல் தான் தோன்றுகிறது. தினமும் வெண்முரசை வாசிக்க ஆரம்பித்தேன். தினமும் காலை, மாலை இரவில் 2 மணி நேரம், அதாவது தினமும் 6 மணி நேரம் வெண்முரசை வாசிக்க தொடங்கினேன். முதற்கனல் தொடங்கி பன்னிரு படைக்களம் வரை நூல்களாய் வாசித்தேன். அது ஒரு தவம் போலிருந்தது. வெண்முரசை வாசிக்கும் பொழுது அசைவ உணவை தவிர்த்தேன். வெண்முரசை வாசிக்கும்பொழுது ஏற்பட்ட உணர்வெழுச்சிகள் என்னை எத்தனையோ முறை மெய்ப்பு அடைய வைத்திருக்கிறது. கண்ணீர் சிந்தியிருக்கிறேன். ஒரு அசைவுமில்லாமல், அந்த நூலில் கரைந்து அழிந்திருகிறேன். சிறு வயதில் மஹாபாரதம் படிக்கும் பொழுது என்னை கர்ணனின் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டுக் கொள்வேன். அவனுடைய வாழ்க்கை போல தான் என்னுடையதும் அமைந்திருக்கிறது என்று. அதுபோலவே கிருஷ்ணரின் மேல் அளவுக்கடந்த பக்தி உண்டு. சிறுவயதில் சில நாடகத்தில் நான் கிருஷ்ண வேடம் தரித்திருக்கிறேன். பல பேர் நான் அந்த வேடத்தில் அப்படியே பொருந்துவதாய் சொல்ல கேட்டு பூரிப்படைந்திருக்கிறேன்.
நீலம் வாசிக்கையில் இளைய யாதவன் என்னை முழுமையாய் ஆக்ரமித்துக் கொண்டான். ஏனோ இம்முறை என்னை கர்ணனுடன் தொடர்புபடுத்தி கொள்ளமுடியவில்லை. நான் ஒரு நாவலை வாசிப்பது என்றால் ஏதாவதொரு கதாபாத்திரமாய் என்னை மாற்றிக் கொள்வேன். முன்பு 14 வயதில் பொன்னியின் செல்வன் வாசிக்கையில் என்னை வந்தியதேவனாய் எண்ணிக் கொண்டேன். வெண்முரசில் என்னை இளைய யாதவனாய் பாவித்துக் கொண்டேன். வெண்முரசை வாசிக்க தொடங்குகையில், இது என்னை இறுதியில் நிலைகுலைய வைக்கும் என்று நிச்சயமாய் தெரியும். கர்ணனாக என்னை நினைத்துக் கொண்டால், என்னால் அவனிடமிருந்து மீண்டு வரவே முடியாது என்று யூகித்திருந்தேன். கர்ணன் அப்படிபட்டவன். தன்னுடைய இயலாமைகளுக்கு மேல் தன் வீரத்தை படர விட்டு, தனக்கு அங்கீகாரமொன்று வேண்டும் என்ற வேட்கை தான் அவனை இறுதிவரை அழைத்து சென்றது. நான் ஒருபோதும் அப்படி ஆகிவிட கூடாதென்று நினைத்துக் கொண்டேன். அதனாலோ என்னவோ இளைய யாதவன் சர்வ சாதாரணமாக என்னுள் வந்து அமர்ந்துக் கொண்டான். அவனாக நான் இருக்கையில், வெண்முரசில் எத்தனையோ உணர்வெழுச்சிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க முடிந்தது. மே மாதம் 2020 படிக்க தொடங்கிய நான் பத்து மாதத்தில் வெண்முரசை முழுதாய் வாசித்து முடித்தேன். என் வேகம் எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது. வெண்முரசை வாசிக்கையில் எத்தனையோ முறை உங்களுக்கு கடிதம் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் அது வெறும் எனது உணர்ச்சி கடிதங்களாய் தான் இருந்திருக்கும் என்றும் நினைத்துக் கொள்வேன். அதுவல்ல நான். சொல்வளர்காடு தொடங்கி முதலாவின் வரை இணையத்தில் வாசித்தேன். இமைக்கனம் வாசிக்கும் பொழுது ஆசிரமத்தில் கொரோனா தோற்று வந்து நாங்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்தோம். இமைக்கணத்தில் கர்ணனுக்கும் இளைய யாதவருக்கும் இடையே வரும் உரையாடல் அப்பொழுது எனக்கு மிகுந்த பக்கபலமாய் அமைந்தது. இன்னும் எத்தனையோ சூழலில் வெண்முரசின் வழி நான் வாழ்வை நோக்கியிருக்கிறேன். நிறைய மாறியிருக்கிறேன். என் சிந்தனைகள், என் பேச்சு, ஒரு விஷயத்தை அணுகும் விதம், சுற்றி நடக்கும் அரசியல், அதை கையாளும் விதம், என் ஆளுமை என வெண்முரசு அளிக்காத கொடையில்லை. அனைத்தும் இலக்கிய கொடை.
கல்பொருசிறுநுரை என்னை நிலைகுலைய வைத்தது ஐயா. இளைய யாதவரின் விண்புகுதலை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடையவில்லை. அதை படிக்கும் பொழுது, என் கைகள் அதிர்வதை உணர்ந்தேன். முகமெல்லாம் வெம்மைக் கொண்டு, மூச்சு அடைபட்டது. பின்பு தெரிந்துக் கொண்டேன் அது panic அல்லது anxiety attack என்று. இளைய யாதவர் விண்புகுதலை இன்று வரை என்னால் படிக்க முடியவில்லை. என்னுள் எழுந்துருக்கும் இளைய யாதவன் அணைய கூடாது. அவன் விலகுவது, என்னுளிருந்து எதையோ வெட்டி வெளியே வீசுவதற்கு சமம். அதனால் அந்த அத்தியாயத்தை மட்டும் நான் படிக்க வில்லை. இது சரி தானா எனக்கு தெரிய வில்லை. அப்போழுது ஒன்றை அறிந்துக் கொண்டேன். எனது கடைசி காலம் என்று ஒன்று இருந்தால், அப்பொழுது வெண்முரசை வாசிக்க வேண்டும். இளையயாதவர் விண்புகுதலை என்னால் அப்பொழுது தான் ஏற்கமுடியுமென்று. வெண்முரசை பற்று சுவாமியிடம் நிறைய பகிர்ந்துக் கொள்வேன். நான் பகிர்ந்துக் கொள்ளும் ஒரே ஆளுமை அவர்தான். அவருக்கு நன்றி.
வெண்முரசை வாசித்து முடித்தவுடன், அதிலிருந்து விடுபட என்னால் முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மீண்டும் ஒரு 4 மாதம் உங்களை வாசிக்கவில்லை. பின்பு விஷ்ணுபுரம், கொற்றவை, புனைவு களியாட்டு சிறுகதைகள், பொதுத்தொகுப்பு சிறுகதைகள், டார்த்தீனியம், அந்த முகில் இந்த முகில், கதாநாயகி, தங்கபுத்தகம், அருகர்களின் பாதை என்று lockdown சமயத்தில் உங்கள் தளத்தில் வந்த அனைத்தையும் வாசித்தேன். பின் உங்கள் நூல்கள் என்னை ஆக்கிரமித்தன. இந்திய ஞானம், இன்றைய காந்தி, புல்வெளிதேசம், இந்தியப்பயணம், சங்க சித்திரங்கள், தன் மீட்சி, இப்படி இன்னும் நிறைய நூல்கள் வாசித்துக் கொண்டே இருந்தேன். இதுவெல்லாம் வெண்முரசிலிருந்து விடுபடத்தான் என்று புரிந்துக் கொண்டேன். அதை என்னால் துறக்கவோ கடக்கவோ முடியவில்லை.
பின் மீண்டும் பல்கலையில் face to face வகுப்புகள் எல்லாம் ஆரம்பமாகியது. நிறைய நண்பர்களை சந்தித்தேன். காதலில் விழுந்தேன். மீண்டும் ஒரு காதல் முறிவு. நண்பர்களுடன் அரட்டை என மெதுவாய் வெண்முரசை கடந்துக் கொண்டிருந்தேன். பின்பு படிப்பு, படம் இயக்குவது, நாடகம், நடனம், emceeing என கலைவாழ்வு என்னை இழுத்துக் கொண்டது. ஆனால் இளைய யாதவன் என்னுள் நிரந்தரமாய் தங்கி விட்டான். அவனை ஒருக்காலும் என்னால் விலக்க முடியாது என்று அறிந்துக் கொண்டேன். அவன் அவ்வப்பொழுது என்னிலிருந்து வெளிப்படுவதை நான் உணரமாலில்லை. வெண்முரசிலிருந்து நான் விடுபட, அதை கடந்து வர கொஞ்சம் கஷ்டப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த கடிதத்தை எழுதும் காரணம், நான் கடக்க நினைத்த, கடந்து விட்டேன் என்று நினைக்கின்ற வெண்முரசு மீண்டும் என்னை அழைக்கிறது. இது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை என்று தான் சொல்வேன். இதில் மீண்டும் நான் இறங்கலாமா என்ற கேள்வி தான் என்னுள் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது முதல் வரியை இங்கே மீண்டும் சொல்கிறேன். மாபெரும் மலை போன்றது வெண்முரசு. அதை ஏறிக் கடந்து விட்டேன். மாபெருங்கடல் போன்றது அது, அதை எப்படியோ நீந்தி வந்து விட்டேன். மீண்டும் அதனுள் குதிக்கலாமா? ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்கிறது ஐயா.
நான் இதை துறந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இளைய யாதவன் சொன்னதுதான்.
“துறக்கப்படுவதெல்லாம் இல்லாமலாவதில்லை. துறக்க பட்டது என்ற வடிவில் எஞ்சியே நிற்கும்.”
ஏனோ இதை செய்வது சரியென்று படுகிறது. என்னை தொகுத்து கொள்ளவோ இந்த கடிதம் என்று கூட தோன்றுகிறது. முன்பு வாசித்தது எனக்காக ஐயா. இப்பொழுது என்னை சுற்று உள்ளவர்களுக்காக வாசிக்க போகிறேன். வாசித்தவற்றை என்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களிடம் பகிரப்போகிறேன். என் கலையூடாக இதை என்ன செய்ய முடியுமோ, அதை செய்ய முயற்சிக்க போகிறேன். இளைய யாதவன் என்னுடன் இருப்பான். முதற்கனலை நாளை தொடப் போகிறேன். அது கனல் என்று அறிகிறேன். அது அனையா அனல் என என்னை எரித்தழிக்கட்டும். “நான்” எரித்தழிக்கப்பட வேண்டும். ஆம். அவ்வாறே ஆகட்டும்.