பெயர் சர்வேந்திரன். சர்வின் செல்வா என்பது இப்போதைக்கான பெயராகிறது. உப்சி பல்கலைகழகத்தில் நாடகத்துறையில் இளங்கலை பட்ட மாணவன். அடுத்த 2025 வருடம் நிறைவு பெற்று விடும். அதன் பிறகான செயல்பாடுகள் அனைத்தும், சினிமாவையும் இலக்கியத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்ற உளநிலை. தெய்வம் அதற்கு அருள்வதாக. பிறந்த தினம் 19 ஜூலை 1997. சரியாக வெள்ளிகிழமையில். ஆடிமாத முதல் வெள்ளி அது. தாயார், கலைச்செல்வி. தந்தை செல்வபாண்டியன். இருவரையும் பார்த்து, சந்தித்து நெடு நாட்களாகிறது. சகோதரராக மூத்தவர் இருக்கிறார். பெயர் கஜேந்திரன். என்னைவிட இரண்டு வயது மூத்தவர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் பினாங்கில். மலேசிய நாட்டின் ஒரு மாநிலம். 15 வயதுவரை பினாங்கு வாழ்க்கை. ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் சிறு வயது பிராயம் கடந்து போனது. ஆரம்பக் கல்வி ராமகிருஷ்ணா தமிழ் பள்ளியில். சுமாராக படிக்கும் மாணவன். மெதடிஸ்ட் ஆண்கள் இடைநிலை பள்ளியில் படிவம் மூன்று வரையிலான பள்ளி வாழ்க்கை. இதற்கிடையில் 12 வயதில் சுவாமி பிரம்மனந்தரின் அறிமுகம் அமைந்தது ஒரு பெரும் திருப்பு முனை. இப்பொழுது நினைத்துப் பார்கையில், அந்த சந்திப்பு ஒரு மகத்தான தொடக்கத்திற்கு முதற் படி. இன்னும் நெடுந்தூர பயணம் இருக்கிறது. பயணிப்போம்.
15 வயதில் கூலிம் நகரை அடைந்து சுவாமியின் தியான ஆசிரமம் என்னை அரவணைத்துக் கொண்டது. மற்றபடி இன்றிருக்கும் வாழ்வு எல்லாம் அங்கிருந்து தொடங்கியது தான். சுவாமியின் வேதாந்த தத்துவ வகுப்பில் ஈடுபாடு, சினிமாவை பற்றிய கனவுகள், வாசிப்பு, இலக்கியம் பிறகு நண்பர்களுடன் அரட்டை என முழுதும் கொண்டாட்டமான நாட்கள். இலக்கியம் அறிமுகமானது சுவாமி மூலமாக தான். அவருக்கு என்றும் எனது பணிவான வணக்கமும் நன்றியும். மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் தான் என் முதல் இலக்கிய அறிமுகம். அவரின் முதல் படைப்பாக நான் வாசித்தது அனல் காற்று எனும் குறுந் நாவல். அந்த வாசிப்பிற்கு பிறகு இனி இவரை விட்டு அகலலாகாது என்ற முடிவு, இன்றுவரை என்னுள் அது அத்தனை இறுக்கமான பிடிப்பாகியிருக்கிறது. அதன் பிறகு நடந்தது எல்லாம் வாசிப்பு குவியல்கள் மட்டுமே. கூடவே மலேசிய எழுத்தாளர்களின் எழுத்தும் கவர்ந்தன. குறிப்பாக ம.நவீன், சு.யுவராஜன், கே.பாலமுருகன் போன்ற மலேசிய எழுத்தாளர்கள். அவர்களின் செயல்பாடுகள் மலேசிய இலக்கிய உலகை என்னை கூர்ந்து கவனிக்க வைத்தது.
என்னளவில், என் படைப்புகளாக வெளிவந்திருப்பது, சில சிறுகதைகளை மட்டுமே. 2022, 2023 மலாயா பல்கலைகழகம் நிகழ்த்திய பேரவை கதைகளில், முதலிடம், இரண்டாம் நிலை மற்றும் ஆறுதல் பரிசாக என் மூன்று சிறுகதைகள் தேர்ந்தெடுக்க பட்டு, பரிசளிக்கப் பட்டன. படையாழி, ஒரு துளி கபம் மற்றும் நீலி என்ற சிறுகதைகள். நண்பர்களான என் வாசகர்களால் வாசிக்கப்பட்டு கருத்துகளும் பரிமாறிக் கொள்ள பட்டன. அடுத்து இயல் மன்றம் நடத்திய இயல் இலக்கிய விழாவிலும் முதல் பரிசை வென்றது, எனது இங்கெல்லாம் நியதிதான் எனும் சிறுகதை. மேலும், வடமலேசிய பல்கலைகழகம் வைத்த பைந்தமிழ் சிறுகதை போட்டியில், பார்த்த முகம் எனும் என் சிறுகதை முதல் பரிசை வென்றது. பேச்சு போட்டிகளிலும், பட்டிமன்ற பேச்சுக்களிலும் பங்கு பெற்றிருக்கிறேன்.
என் பிறந்த மாதத்தின் முதற் தொடக்கமாக, ஜூலை மாத வல்லினத்தில் என் முதல் சிறுகதை பிரசுரமாகியது. கிருஷ்ணை எனும் தலைப்பு. சுவாமியின் ஆசியும் நல்வாழ்த்துகளையும் பெற்ற சிறுகதை. வல்லினம் ஆசிரியரின் கவனத்தையும், உற்சாகத்தையும் பெற்ற கதை. இன்னும் நிறைய படைப்புகள் வெளிவர இன்னும் நிறைய செயல்பாடுகள் தேவைபடுகிறது. இப்போதைக்கு இளம் எழுத்தாளன் தான். எழுத்தின் மேலும் சினிமாவின் மேலும் தீரா மோகம், என்னை உந்தும் சக்தியாக ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. என் படைப்புகளுக்காக நான் எனக்கே அளித்துக் கொள்ளும் முதல் தொடக்கம் இந்த தளம். என் அகப் பகிர்வுகள், சிறுகதைகள், சினிமா விமர்சனங்கள் மற்றும் கேள்வி பதில் கடிதங்களும் இதில் வெளியிடப்படும். முதல் முயற்சி இது. அனைத்தையும் நலம் பற்றட்டும். நன்று சூழ்க.